search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி கொலை"

    • ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் விரைந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில், மது அருந்துவதை தடுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு முனீஸ் சக்சேனா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.

    அவரது மனைவி ஷனோ (40), முனீஸ் மேலும் மது அருந்துவதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.

    ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஷவேனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அவரது மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.

    • தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
    • கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டம் பிடாபாஜூ கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன்பாக். கூலி தொழிலாளி. இவரது மனைவி தரித்ரி (வயது30).

    இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் அர்ஜூன் பாக் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். தான் வேலைக்கு சென்ற நேரங்களில் மனைவி வேறு வாலிபரை அழைத்து உல்லாசமாக இருந்ததாக கருதினார்.

    இதுபற்றி மனைவிடம் கேட்டார். அதற்கு தரித்ரி மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இந்த பிரச்சனை தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அர்ஜூன்பாக் கோடரியால் தரித்ரியின் தலையை துண்டித்து கொன்றார். பின்னர் தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த விவரத்தை கூறி சரணடைந்தார். போலீசார் அந்த பையை கைப்பற்றி அர்ஜூனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
    • ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எருமைபட்டி கிராமம் கூத்தாடிபாளையம் பூசாரி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (78), ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அலுவலர். இவரது மனைவி லட்சுமி(72). இவர்களுக்கு ராஜா, ஜெயக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று இரவு கந்தசாமி வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு குடும்பத்தினருடன் தூங்கச் சென்றுள்ளார். கந்தசாமி மற்றும் லட்சுமி ஒரு அறையிலும் அவரது மகன்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கந்தசாமி தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி லட்சுமியின் தலையில் அம்மிக் கல்லை தூக்கி போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் லட்சுமி பலியானார்.

    இதை அடுத்து சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது மகன்கள் தங்களின் தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கொலை செய்த கந்தசாமியிடம் கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்கடேசன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார்.

    திருப்போரூர்:

    திருப்போரூர், கன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 29). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசனுக்கு மனைவி அனிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இதன்காரணமாக அனிதா கணவருடன் கோபித்துக் கொண்டு திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் உள்ள தன்னுடைய தாய்வீட்டிற்கு அடிக்கடி செல்வதும் பின்னர் வெங்கடேசன் சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தும் வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மீண்டும் மனைவி அனிதாவிடம் நடத்தை தொடர்பாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் கத்தியால் மனைவி அனிதாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார். இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் அனிதா மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அனிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே வெங்கடேசனை திருப்போரூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
    • ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி குன்னம்தானம் பகுதியை சேர்ந்தவர் வேணு(வயது45). இவரது மனைவி ஸ்ரீஜா(35). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார்.

    வேணு மற்றும் அவரது மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு எற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களது மகன் ஸ்ரீஜாவுடனே வசித்து வந்திருக்கிறார்.

    இந்நிலையில் மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த வேணு, தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்பு அவர் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டார்.

    ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கீழ்வாய்ப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு திருவல்லாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    ஸ்ரீஜா உடலில் 13 இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. கணவன்-மனைவி இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரால் கொல்லப்பட்ட ஸ்ரீஜா, தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார்.
    • அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அருகே உள்ள ஆலபடம்பு பகுதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரசன்னா(38).

    ஷாஜி மற்றும் பிரசன்னாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரசன்னா கண்ணூர் கட்டிலபீடிகா பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தார்.

    இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார். அப்போது அவர் மனைவியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    அதில் ஆத்திரமடைந்த ஷாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொலை செய்தார். பிரசன்னாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு பிரசன்னா தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியை தலை துண்டித்து கொன்ற ஷாஜியை தேடி வந்தனர். இந்நிலையில் பையனூர் போலீஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் கண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
    • தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரை அடுத்துள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி செல்வ பிரியா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சின்னசாமி அடிக்கடி வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்வபிரியா கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சின்னசாமி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வ பிரியா கழுத்தறுக்கப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சின்னசாமியை பிடித்து விசாரித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.

    • கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப செலவுக்கு கவுசல்யா கணவர் குமாரிடம் பணம் கேட்டார்.
    • குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவரும், தீவட்டிபட்டியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப செலவுக்கு கவுசல்யா கணவர் குமாரிடம் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், கவுசல்யாவை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கவுசல்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை வழக்கு சேலம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தீர்ப்பு வழங்கினார். அதில் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    • இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் அபர்ணா ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தாய் என தட்டிக்கேட்டார்.
    • நள்ளிரவில் பிரபு அபர்ணா தலையில் கல்லை தூக்கிபோட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அபர்ணா (வயது 35). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அபர்ணா தனது கணவருடன் தலித்வாடா கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அன்று மாலை நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிரபு கலந்து கொண்டு நடனம் ஆடியபடி சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் பிரபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த தகவல் பிரபுவின் மனைவி அபர்ணாவிற்கு தெரிய வந்தது.

    இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் அபர்ணா ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தாய் என தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அபர்ணாவின் தாய் மகளுக்கு சாதகமாக பேசியதால் பிரபு அவமானமாக கருதினார். அருகில் இருந்தவர்கள் கணவன் மனைவியை சமாதானம் செய்து வைத்தனர்.

    அபர்ணாவின் தாய் வீட்டிற்கு வெளியே தூங்கினார். கணவன் மனைவி இருவரும் வீட்டில் உள்ள அறையில் தூங்கினர்.

    நள்ளிரவில் பிரபு அபர்ணா தலையில் கல்லை தூக்கிபோட்டார். இதில் அபர்ணா துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லட்சுமியின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கும், புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் இருந்தது.
    • புண்ணியவதியின் கழுத்தை முத்து அறுத்தபோது மற்றொரு மகள் சந்திரா தடுத்துள்ளார்.

    வேளச்சேரி:

    சென்னை சோழிங்கநல்லூர் காந்தி நகர் ஏரிக்கரை வசித்து வருபவர் முத்து. இவரது மனைவி புண்ணியவதி(வயது 46). இவர் சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு வேலை செய்து வந்தார். முத்து கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் லட்சுமி.

    இந்தநிலையில் லட்சுமியின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கும், புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு 7 மணியளவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த முத்து, மனைவி புண்ணியவதியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் புண்ணியவதி பரிதாபமாக இறந்தார்.

    புண்ணியவதியின் கழுத்தை முத்து அறுத்தபோது மற்றொரு மகள் சந்திரா தடுத்துள்ளார். அப்பொழுது அவருக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. அவர் காயத்துடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே முத்து தலைமறைவானார்.

    இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துவை கைது செய்தனர்.

    • பெற்றோர்களின் வற்புறுத்தலால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.
    • கொலை செய்யப்பட்ட நித்திய காமாட்சியின் தாயார் இளஞ்சியம் அன்னவாசல் போலீசில் புகார் செய்தார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அன்னவாசல் மேட்டு தெரு ஜெ.ஜெ,காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 35). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் மகள் நித்திய காமாட்சி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.

    இந்த தம்பதியருக்கு அஸ்வந்த் என்ற மகனும் நிவாஸ்ரீபுவிஅட்சரா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார்.

    பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.

    இருந்த போதிலும் மனைவி மீதான கோபம் அடங்காத பால்ராஜ் கடந்த டிசம்பர் மாதம் நித்தியகாமாட்சி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அடுப்பில் இருந்த நெருப்பு கனல்களை அள்ளி அவரது முதுகில் போட்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

    பின்னர் பெற்றோர்களின் வற்புறுத்தலால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே மீண்டும் அவர்களுக்கிடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ் இன்று அதிகாலை மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது அவரது தலையில் குழவிக்கல்லை போட்டார். இதில் அவரது தலை நொறுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நித்திய காமாட்சி துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் போலீசுக்கு பயந்து பால்ராஜ் தன்தை தானே கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கொலை செய்யப்பட்ட நித்திய காமாட்சியின் தாயார் இளஞ்சியம் அன்னவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் குழவிக்கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு கணவன் முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
    • நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது45). கல் குவாரியில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(35). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீதர் மதுகுடித்து வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் மதுபோதையில் வந்த ஸ்ரீதர் மனைவியிடம் கடும் வாக்குவாதம் செய்தார். பின்னர் கணவன் -மனைவி இருவரும் தூங்கிவிட்டனர்.

    எனினும் ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீதர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதிகாலை 4 மணிஅளவில் எழுந்த ஸ்ரீதர் தூங்கிக்கொண்டு இருந்த மனைவி செல்வராணியின் தலையில் அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கிப்போட்டார். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வராணி துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு எழுந்த அவர்களது குழந்தைகள் தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு பயத்தில் அலறினர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எடமச்சி பஸ் நிறுத்தம் அருகே நின்ற ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×